Thursday, 27 November 2014

MASTERCAM-தமிழில்...-2மெக்கானிகல் துறையைப் பொறுத்த வரையில் வெளிநாட்டில் மட்டுமில்லை, நம் நாட்டில் கூட நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் CNC யைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்.

CNC என்றால் என்ன .. அதன் பயன்பாடு என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

மின்னலே படத்தில விவேக் ஒரு டயலாக் சொல்லுவாப்ல. 'அடப்பாவிகளா. உள்ள 750 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு. அதுல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சைப் பழத்துல ஓடப்போகுது? " . அந்த 750 ஸ்பேர் பார்ட்ஸ்-யும் உருவாக்குகிற பிரம்மாதான் இந்த CNC. அதாவது Computer Numerical Control Machine. 

எங்க ஊரு லேத் பட்டறையில மில்லிங் மெசின், டர்னிங் மெசின்,கட்டிங் மெசின் எல்லாம் பார்த்திருக்கோம், கேள்வியும் பட்டிருக்கோம். அது என்ன கம்ப்யூட்டர் நுமெரிகல் கன்ட்ரோல்..? கொஞ்சம் புரியும் படியாக சொல்ல வேண்டுமென்றால்.... 

உதாரணத்திற்கு உங்க பைக் அல்லது காரில் உள்ள ஒரு ஸ்பேர் பார்ட்-டை எடுத்துக் கொள்வோம். அதை ஒரு மேனுவல் மெசின்(Manual Machine)-ல் ஒருவர் ஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி உற்பத்தி செய்வதற்கு மூன்று  மணி நேரம் எடுத்துக் கொள்கிறார் என வைத்துக் கொள்வோம். அதே நபர் அதே பாகத்தை நூறு எண்ணிகையில் செய்யும்போது முன்னூறு மணி நேரம் எடுத்துக் கொள்வார் இல்லையா..? அதுவே ஆயிரக்கணக்கில் தேவைப்படும்போது நிறைய நாட்கள் தேவைப்படும் அல்லவா. மட்டுமில்லாமல் கடுமையான உழைப்பும் தேவைப்படும். அதற்கான உற்பத்தி செலவும் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் அதிகரிக்க செய்யும் அல்லவா..? 

இதுபோன்ற 'Mass Production' எனப்படும் ஒரே மாதிரியான பாகத்தை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் போது ஏற்படும் நேர விரயத்தையும் கடும் உழைப்பையும் உற்பத்தி செலவையும் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது தான் CNC Machine. இதன்மூலம் அதிக தரமுள்ள பாகங்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் இழப்பும் (Rejection) முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது.

அப்படி இந்த மெசின் என்ன செய்கிறது என்று கேட்க வருகிறீர்களா..? சிம்பிளான விசயம்தான். ஒரே ஒரு பாகத்திற்கு புரோகிராம் எழுதி CNC Machine-ல் செட்டப் செய்துவிட்டால் போதும். பிறகு மாட்டிக் கழட்டுற  வேலைதான். இந்த மெசினை இயக்குவதற்கு திறன் வாய்ந்த மெசினிஸ்ட் தேவையில்லை. குப்பன் சுப்பனே போதும்.

மிக அனுபவம் வாய்ந்த ஒரு மெசினிஸ்ட் அந்த பாகத்தை முழுமையாக முடிக்க மூன்று மணிநேரம் எடுத்துக் கொள்கிறார் என்றால் நம்ம CNC அண்ணாத்தே மூன்று நிமிடத்தில் முடித்துவிடுவார். பிறகு ஆயிரம் என்ன பத்தாயிரம் என்ன சில மணிநேரங்களில் முடித்துவிடலாம். தவிர, பொருளின் தரத்திற்கு நூறு சதவிகித உத்திரவாதம் தரலாம். ஏனென்றால் தவறுகள் மனிதன்தான் செய்வானே தவிர மனிதனால் படைக்கப்பட்ட இயந்திரங்கள் செய்யாது. 


மேலும் உற்பத்தி செய்வதற்காக நேரமும் அதற்கான மனிதவளமும் குறைவாகத் தேவைப்படுவதால் பொருளின் விலையும் மிகக் குறைவாகத்தான் இருக்கும். இந்த CNC  மட்டும் கண்டுபிடிக்கவில்லை என்றால் இன்றைய நமது வாழ்க்கைக்கு மிக அத்தியாவசிய பொருளாக இருக்கிற பைக்கும் காரும் விற்கின்ற விலைக்கு நமக்கு வெறும் கனவாகவே போயிருக்கும்.

இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் CNC இயந்திரம் தவிர்க்க முடியாதது. நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் மானிடர் ஃபிரேம், கையில் பிடித்திருக்கும் மவுஸ், கீ போர்டு , உங்கள் சட்டையின் பட்டன், தண்ணீர் பாட்டில் உட்பட நம்மோடு அன்றாடம் பயணிக்கும் அத்தனை பிளாஸ்டிக் பொருட்களும் CNC இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட மோல்ட்(MOLD ) மூலம் செய்யப்பட்டது. அதாவது கரடுமுரடான கற்கால உலகத்தை அழகாக வடிவமைத்து நவீன இயந்திர உலகமாக இந்த CNC இயந்திரங்கள் மாற்றியமைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

15 வருடங்களுக்கு முன்னால் சென்னையில் CNC புரோகிராமராக வேலை பார்த்தபோது அவ்வளவாக CNC மெசின்கள் கிடையாது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மொத்தமே பத்து கம்பெனியில் தான் CNC மெசின்கள் இருந்தது. காலப்போக்கில் அதன் தேவை அதிகரித்து இன்றைக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஒரே CNC மயம்தான். சென்னையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இந்த இயந்திரங்கள் ஆக்கிரமித்துள்ளன. 
இந்த CNC துறையில் உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் அபரிமிதமாக கொட்டிக் கிடக்கிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,UK, கனடா,வளைகுடா நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் CNC லைனில் நம்மவர்கள்தான் கொடிகட்டி பறக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ஈடான சம்பளமும் இதில் கிடைக்கிறது.

சரி... இதில் CAD/CAM எங்கே வருகிறது..? 

CNC இயந்திரங்களை இயக்குவது ஒன்றும் சவாலான விஷயம் இல்லை. முன்பே சொன்னது போல் யார் வேண்டுமானாலும் இயக்கலாம். அதில் JOB செட் செய்வது கூட அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. அனுபவம் இருந்தாலே போதும். ஆனால் Program என்கிற வஸ்து இருக்கிறது அல்லவா..? அதில்தான் விஷயம் இருக்கிறது. நாம கத்துகிட்ட மொத்த வித்தையையும் அதில்தான் இறக்கி வைக்க வேண்டும்.
 
Program என்பது CNC இயந்திரத்திற்கு நாம் இடும் கட்டளை. Program என்பது இயந்திரத்திற்கான மொழி. அதை அது வழியில் பேசிதான் நாம் காரியத்தை சாதிக்கவேண்டும். அந்த மொழியில் நாம் கைத்தேர்ந்தவராக இருத்தல் வேண்டும். நூறு பாகங்கள் செய்யவேண்டும் என்றால் ஒரு Program செய்தால் போதுமானது. ஆயிரம், லட்சம் என்றாலும் ஒரே Program தான். அப்படியானால் அந்த ஒரு Program -ஐ பிழையில்லாமலும் நேர்த்தியாகவும் எழுத வேண்டும் அல்லவா..? அந்த  Program -ஐ தருவிக்கும் மென்பொருள்தான் நான் விரிவாக நடத்தப்போகும் CAD/ CAM தொழில்நுட்பம்.

முன்பெல்லாம் CNC Program கைகளால் எழுதப்பட்டது. அதாவது கணினி உதவி இல்லாமல் வரைபடத்தில் TOOL பாதையை சரியாகக் கணித்து G-CODE/ M-CODE களைப் பயன்படுத்தி எழுதுவார்கள். இதில் தவறுகள் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. அத்தவறுகள் மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட இயந்திரத்தை நொடிப்பொழுதில் கண்டமாக்கிவிடும். அவ்வகை தவறுகளைத் தவிர்க்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், மிகச்சிக்கலான கைகளால் கூட எழுதமுடியாத அமைப்புடைய பாகங்களுக்கு Program செய்ய கண்டுபிடிக்கப்பட்டது தான் CAD-CAM  SOFTWARE

இயந்திரவியல் துறையில் இது போன்ற Manufacturing software நிறைய இருந்தாலும் ஒரு சில சாப்ட்வேர்கள் மட்டுமே அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. அவற்றில் சில...
  • MASTERCAM 
  • UNIGRAPHICS
  • ALPHACAM
  • GIBSCAM 
  • SOLIDCAM
இவற்றில் MASTERCAM இந்தியாவிலும் மற்ற வெளிநாடுகளிலும் குறிப்பாக அமெரிக்காவில் மிக அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் CNC துறையில் வேலை தேடுபவர்கள் இது போன்ற CAD-CAM SOFTWARE ஏதாவது ஒன்றில் அனுபவம் இருந்தால் உடனே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும். அதேபோல் காலங்காலமாக வெறும் Opertor-ஆக மாவாட்டிக் கொண்டிருப்பவர்கள் இது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயின்று தங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். 


அடுத்த பாகத்தில் 2D /3D  TOOLPATH என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
two-dimensional (2D) CAM


No comments:

Post a Comment